244 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
கூண்டதனைத் திறந்துவிடக் குயிலினங்கள் உளங்குளிரக், குளிர்ந்த நெஞ்சில் ஈண்டிவரும் பெருமகிழ்வால் இனியதமிழ் இசைபாட, இடையீ டின்றி நீண்டவெளி உரிமைபெற நினைந்திங்கு நெடிதுழைக்கும் கலைஞ ருக்கு வேண்டியநற் றுணையாகி விடுதலைக்குப் புணையாகி வெல்க நண்பா! கழகத்தின் செங்கோலாய்க், கலைஞர்க்கு வெண்குடையாய்க், கனிந்து நிற்கும் அழகுக்கோர் அரியணையாய்த், தமிழகத்தின் அரணாகி யாரும் வந்து பழகற்கு நல்லமுதாய்ப் பைந்தமிழின் போர்வாளாய்ப், பண்பு சொல்லும் வழிகட்குத் திருக்குறளாய் வாழ்கின்ற அன்பழகன் வாழ்க நன்றே மான்வாழும் மயில்வாழும் மாமலையில் மலர்க்குறிஞ்சி சேர்த்து வைத்த தேன்வாழும் தமிழ்போலத் தித்திப்பான் பெயர்வாழ்க, திரியா தென்றும் வான்வாழும் கதிரவன்போல் வையகத்தைச் சூழ்கடல்போல் வளங்கள் ஓங்கி யான்வாழும் நாளுடனே யாண்டுபல வாழ்கவென வாழ்த்து கின்றேன். 19.12.1982 (பேராசிரியர் க.அன்பழகன் மணிவிழா வாழ்த்து) |