பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்245

25
தோள் தந்தான்

பகுத்தறிவுக் கோட்டைக்குள் பயின்றுவரும் வீரனவன்
வகுத்தமைத்த ஆரியத்து வஞ்சனைகள் அத்தனையும்
செகுத்தழித்த பெரியாரைச் சிங்கமெனும் ஐயாவை
அகத்துமைத்து வாழுமகன் அவன்பேர்தான் அன்பழகன்

மண்ணாளும் ஆசையினால் மாற்றார்பின் செலவிழையான்
புண்ணான தமிழினத்தைப் போற்றுவதே தொழிலானான்
தண்ணான தமிழ்மானம் தன்மானம் தழைத்துவர
அண்ணாவின் வழிநடப்பான் அவன்பேர்தான் அன்பழகன்!

நிலைபொறுக்க முடியாமல் நெருக்கடிகள் வந்தாலும்
தலைவருக்குத் துணைநிற்றல் தார்மறவன் தொழிலாகும்
இலைபொறுக்கும் இயல்புடையோர் ஏகிடினும் நெருக்கடியில்
கலைஞருக்குத் தோள்தந்தான் கழகத்தைக் காத்திருந்தான்.

கழகத்திற் புயலொன்று கடிதாக வீசுங்கால்
பழமரத்துவௌவால்கள் பறந்தோடிப் போனாலும்
விழுதிருக்கும் ஆல்போல விலகாது நிலைத்திருந்த
அழகுளத்தன் அன்புளத்தன் அவன்பேர்தான் அன்பழகன்

மான்வாழும் மயில்வாழும் மாமலையிற் சேர்த்துவைத்த
தேன்வாழும் தமிழ்போலத் தித்திப்பான் பெயர்வாழ்க!
வான்வாழும் கதிரவன்போல் வையத்தைச் சூழ்கடல்போல்
யான்வாழும் நாளுடனே யாண்டுபல வாழியவே!

(பேராசிரியர் க. அன்பழகன் பிறந்த நாள் வாழ்த்து)