பக்கம் எண் :

112கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

கால்நலிந்து தள்ளாடக் கைகள் அசைந்தாட
மேல்நடந் தென்னருகில் மெல்ல வரும்போது
யார்நடம் ஒப்பாகும்? ஓர்நடமும் ஒப்பில்லை;
சீர்நடையன் என்தோளைச் செங்கையாற் றீண்டுங்காற்
சொல்லரிய இன்பமெனைச் சூழ்ந்துவரும்; தோள்பற்றி
மெல்லிதழாற் கன்னத்தின் மேற்பதித்த முத்திரைகள்
அப்பப்பா பேரின்பம்! அன்றைக் கவள்தந்தது-
ஒப்பப்பா என்றால் ஒருநாளும் ஒவ்வாதே;
இவ்வண்ணம் யான்கண்ட இன்பமெலாம் ஏடெடுத்துக்
கைவண்ணங் காட்டிக் கவிபுனைந்தே இன்புற்றேன்;
ஆனாலும் என்மனத்தே ஆர்வம் அடங்கவிலை
ஏனோ எனமயங்கி ஏங்கிக் களைத்திருந்தேன்;
ஒன்றென் மனத்தே உருவாகக் கண்டுணர்ந்தேன்
என்றும் நிலைக்கும் எழில்மேவுங் காப்பியமே
ஒன்று படைக்க உளங்கொண்டேன் ஏடெடுத்தேன்
அன்றுகடன் காரர் அனைவருமே வந்துநின்றார்;
ஒன்றும் புரியவிலை ஓர்வரியும் ஓடவிலை
என்று தொலையுமடா இக்கடன்கள் என்றுழன்றேன்;
அங்கே ஒருத்தி அரியகுரல் தந்துநின்றாள்
‘ஈங்கே வறுமை இருக்கும் வரை காப்பியமோ?
ஏழைஎனச் செல்வரென எத்தரெனப் பித்தரெனப்
பாழும் உலகிற் படைத்துவைத்த தீங்குகளும்,
தாழ்ச்சி உயர்ச்சி தகுபிறப்பில் உண்டென்று
சூழ்ச்சித் திறனுடையார் சொல்லிவரும் நீதிகளும்,
ஓயாமல் என்றும் உழைப்போரும் அவ்வுழைப்பாற்
சாயாமல் நின்று சதிசெய்து வாழ்வோரும்
இன்றும் இருப்பதற்கே எண்ணும் மடமைகளும்
கொன்று குவிப்பதற்கே கூர்வாள்போல் ஏடெடுத்துப்
பாட்டெழுத வேண்டுமடா பாடுந் தமிழ்மகனே
வேட்டெழுந்து பாவரைந்தால் வெங்கொடுமை மாளுமடா,
நாட்டைக் களமாக்கி வேட்டைத் தொழில்புரிந்த