பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 111

பொட்டழகுங் கார்கூந்தற் கட்டழகுங் கொண்டவளாய்
வஞ்சி ஒருத்தியங்கு வந்தருகில் நின்றெனது
நெஞ்சி லிடங்கொண்டாள் நின்றவளை நான்கண்டேன்;
கொஞ்சுங் கிளிமொழியாள், கொவ்வைச்செவ் வாயிதழாள்,
விஞ்சும் எழில்கூட்டும் வேல்விழியாள், அன்னத்தை
அஞ்சவைக்கும் மென்னடையாள், ஆடும் மயிலினத்தைக்
கெஞ்சவைத்த சாயலினாள் என்னைக் கிரங்கவைத்தாள்;
அன்னவளை இன்பமிகும் என்னவளைக் கையிரண்டும்
மின்னவளை பூண்டவளை என்னுளத்தை ஆண்டவளை
மாலை புனைந்து மணங்கொள்ள நான்நினைந்து
சேலை நிகர்த்தவிழிச் சிற்றிடையாள் காதலையே
நாடோறும் பாடி நலந்துய்க்க வேண்டுமெனுஞ்
சூடேறி ஏடெடுத்துச் சொற்றமிழிற் பாட்டெழுதிக்
கொட்டிக் குவித்தேன், குலமனைவி காதலையும்
மட்டுப் படுத்தும் மனநிலையைத் தந்துவிட்டாள்;
பிள்ளைக் கனியமுது பெற்றெடுத்தாள் ஆதலினால்
உள்ளத்துள் எல்லாமவ் வோவியத்தின் நல்லுருவே
பற்றிப் படர்ந்தென்னைப் பாசத்தாற் கட்டுறுத்திச்
சுற்றி வளைத்துள்ளம் சொக்கிவிடச் செய்ததுகாண்;
செக்கச் சிவந்திருக்குஞ் செவ்விதழின் வாய்மலர்ந்து
பொக்கைச் சிரிப்பொன்று பூத்திருக்கும் அம்முகத்தில்;
விஞ்ஞானம் மேலோங்கி வீறிட் டெழும்நேரத்
திஞ்ஞாலம் நான்பிறந்தேன் என்னுங் கருத்தோடு
விண்ணிற் சிறகடித்து வெட்ட வெளிபறக்க
எண்ணிக் குதிக்க எழுவான்போற் கைகால்கள்
ஆட்டிப் படைக்கும் அழகெல்லா மென்மனத்தை
ஆட்டிப் படைத்தனகாண்; ஆன்றவிந்த சான்றோர்க்கும்
சொன்னால் விளங்காத துய்யமறை போலுமொழி
என்னால் மறக்க இயலுவதோ? அம்மொழியைக்
கேட்காத காதென்ன காதோ? திருமுகத்தைப்
பார்க்காத கண்ணாற் பயனுண்டோ? அம்மகவு