114 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
3. புதியதொரு விதிசெய்வோம் விழிசிவப்பா தணல்சிவப்பா என்று நம்மை வியப்புறுத்தும் உலைக்களத்தில் பற்றும் செந்தீ குழிவயிற்றின் பசிக்கனல்போல் எரிய அங்கே கொல்லனவன் உலைத்துருத்தி ஊதுங் காற்று தொழில்புரிவோன் பெருமூச்சுப் போல வீசத், தூக்கிவந்த வல்லிரும்பை நெகிழக் காய்ச்சி எழிலுறவே சம்மட்டி கொண்டு தாக்கி எண்ணியவா றுருவுபெற ஆக்கி வைத்தான். உடலுயிரைப் பொருளாகக் கருதா திந்த உலகத்தை உருவாக்க முயன்ற தோள்கள் கொடுமைகளை மிடிமைகளை வறுமை தந்த கோணல்களை எத்தனைநாள் சுமக்கும்? மேலும் அடிமையெனப் படிகளென ஆக்கி வைத்தால் அத்தனையும் எத்தனைநாள் உளம்பொ றுக்கும்? இடியெனவே முழங்காதோ அந்த வுள்ளம்? என்றேனும் நிமிராவோ அந்தத் தோள்கள்? வறுமையெனும் உலைக்களத்தில் அடுக்கி வைத்த மதம்சாதி பட்டினிநோய் மூடம் என்ற கரிகளிலே உணர்ச்சியினை மூட்ட, வீசும் காற்றெனவே பெரும்புரட்சி தோன்ற, அங்கே உரிமையெனும் போராட்டச் செந்தீ பற்றும்; *உறிஞ்சிவரும் இரும்புகளை அதனிற் காய்ச்சிச் சரிவுபடாப் பொதுவுடைமைச் சட்டம் என்ற சம்மட்டி யாலடித்தால் உருவ மாகும்.
* உறிஞ்சி வரும் இரும்புகள் - பிறருழைப்பை உறிஞ்சும் இரும்பு போலும் மனமுடையார். |