புதியதொரு விதிசெய்வோம் | 139 |
எல்லாம் பொதுவென்பான் என்பொருள்கள் மற்றவர்க்கு அல்ல தனியென்பான் ஆராத பேராசை! வல்லான் சுரண்டி வளர்வதன்றி மற்றொன்றும் கல்லான் கருதான் களத்தில் நடிக்கின்றான். வால்பிடித்துக் கால்பிடித்து வாழ்வு நடத்துதற்கு வேல்பிடித்த மைந்தன் விரைவாக முந்துகின்றான்; தன்னிலையிற் றாழ்ந்தும் தனதுயிரைக் காப்பதற்குப் பின்னடைய வில்லை பெரும்பேதை ஆகிவிட்டான்; பண்பாடு மூலையிற்போய் பாயை விரித்துவைத்துக் கண்பாடு கொள்கின்ற காலம் இதுவன்றோ? எங்கே உனதுமறை? எங்கே உனது நெறி? எங்கே உனதிறைவன்? என்றால் விழிக்கின்றான்; இங்கே புகுந்தமறை இங்கே புகுந்தநெறி இங்கே புகுந்த இறை என்பவற்றைக் காட்டுகிறான் அந்தோ தமிழினத்தான் தன்னை யறியாது நொந்தே கிடக்கின்றான் நோயிற் படுக்கின்றான்; சொந்தமெது வந்ததெது சொல்ல வகையறியான் வெந்ததைத் தின்று வெறுமனே சாகின்றான்; விண்முட்ட வாழ்ந்து வியந்த வரலாறு மண்முட்டச் சாய்ந்து மடிவதோ? பீடுடுத்து வாழ்ந்த வரலாறு வீழ்ந்து மறைவதோ? தாழ்ந்து கெடுதல் தகுமோ?எனவெழுந்து பண்டை வரலாற்றைப் பாரில் நிலைநிறுத்தி மண்டும் புகழ்சேர்க்க வந்தோர் சிலராவர்; தாளாண்மை கொண்டு தளராது பாடுபட்ட வேளாண்மை நெஞ்சர் விதைத்த உணர்வுகளை நெஞ்சமெனும் நன்செய்யில் நேர்த்தி பெறவிளைத்து விஞ்சுபயன் கொள்க விழைந்து. பாரி விழா, பறம்பு மலை, 27.4.1980 |