பக்கம் எண் :

138கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

ஆசைக்குட் பட்டே அலைகின்றான் பாவிமகன்;
நல்ல அரசியலில் நச்சைக் கலந்துவிட்டான்;
சொல்லும் மொழியெல்லர்ம் சூதன்றி வேறில்லை;
சூதாட் டரசியலில் சொக்கித் திரிபவரைச்
சூதாட்டக் காயாக்கிச் சொக்கட்டான் ஆடுகிறான்;
பண்பாட் டரசியலைப் பாழடித்துச் சாகடித்துத்
தன்பாட்டில் மட்டும் தனியார்வம் காட்டுகிறான்;
கண்டுமுதல் காணும் களமாக்கி அச்செயலைத்
தொண்டென்றும் சொல்லித் தொலைக்கின்றான் மக்களிடம்;
நோக்குந் துறைதோறும் நோய்செய்யும் போலிகளே
தூக்கித் தலைநிமிர்த்தித் தோளுயர்த்திச் செல்கின்றார்.
ஏட்டில் படித்தேன் இலக்கணப் போலியென
நாட்டிலும் போலிகள் நன்கு பெருகிவிட்டார்;
மானம் மறந்தான் மனத்தைத் துறந்துவிட்டான்
போனது போகப் பொருள்வந்தாற் போதுமென்றான்;
ஒட்டும் வயிற்றில் உடுத்த உடையில்லை
கட்டும் தறியில்தான் காலமெல் லாங்கிடப்பான்;
சிக்கல் எடுப்பான் சீர்செய்வான் பாநூலைச்
சிக்கலுக்குள் சிக்கி இவன்மட்டும் சீரழிவான்;
பாவறுந்த நூலைப் பதப்படுத்தி ஒட்டிவைப்பான்
வாழ்வறுந்து போனால் வழியின்றித் தான்தவிப்பான்
நூற்றுக் கணக்கிலவன் நூற்றுக் கொடுத்தாலும்
சோற்றுப் பருக்கைக்கு நோற்றுக் கிடப்பான்;
நாட்டுப் பசிபோக்க நாற்றை நடுகின்றான்
வீட்டுப் பசிநீக்க வேளாளன் சாகின்றான்;
பல்லுயிரும் வாழப் பகுத்துண்டான் முன்னாளில்
பல்லுயிரும் வாடப் பறித்துண்பான் இந்நாளில்;
கூம்பிக் கிடக்கும் குடும்ப நிலைகண்டும்
சோம்பிக் கிடந்தே சுகங்கண்டு வாழ்கின்றான்;
பாவம் பழியென்று பாரான் தனதுமனம்
தாவும் செயலொன்றே தக்க தெனப்புரிவான்;
சின்ன நலமொன்றுசேரும் எனத்தெரிந்தால்
என்ன பெரும்பழியும் ஏற்கத் தயக்கமிலான்;