புதியதொரு விதிசெய்வோம் | 137 |
விஞ்சும் இயல்புடையான் துஞ்சுதலைத் தான்விழையான்; அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்; தக்கும் புகழென்றால் தாவி அதுபெறவே பொக்கை உயிர்போக்கிப் பொன்றாது நின்றிருப்பான் சூழும் பழியென்றால் தூவென் றுமிழ்ந்தொதுக்கி ஆழி உலகம் அதுபெறினும் தான்வேண்டான்; தன்னலம் ஒன்றைத் தவிர்த்திடுவான் மற்றவர் தந்நலம் வேண்டித் தனிமுயற்சி மேற்கொள்வான் யாதுமென் ஊரென்பான் யாவரும் கேளிரென்பான் தீதறியான் சூதறியான் சாதலும் கண்டஞ்சான் தன்னிற் பெரியோரைத் தான்வியந்து நின்றாலும் தன்னிற் சிறியோரைச் சற்றும் இகழ்ந்தறியான்; வாழ்வில் வருமானம் வாய்ப்பின் அதுவேண்டான் *சாவில் வருமானம் ஒன்றே சரியென்பான்; ஒன்றே குலமென்றான் தேவன் ஒருவனென்றான் நன்றே இறையுணர்வை நாட்டிற் குணர்த்திவந்தான் வாழ்ந்த தமிழினத்தின் வாய்த்த வரலாறு சூழ்ந்து சொலக்கருதின் சொல்லில் அடங்காது; நாகரிகத் தொட்டில் நமது திருநாடு வாகுடனே வாழ்ந்த வரலா றிதுவாகும்; வாழ்ந்த வரலாற்றில் வந்த சிலசொன்னேன் வீழ்ந்த வரலாறு விண்டால் மனம்நோகும்; முச்சங்கம் கண்டு மொழிவளர்த்தோன் எப்பகையின் அச்சங்க ளின்றி அமைதியில் நூல்படைத்தோன் ஆங்கிலத்தால் ஆரியத்தால் ஆதிக்க இந்தியினால் தீங்குவரு மோவென்று திண்டாடி நிற்கின்றான் பண்படுத்தும் நூல்கள் பலதந்தோன் சான்றோரைப் புண்படுத்தி மன்பதையின் பண்பழிக்கும் ஏடுகளே இன்றுகுவிக் கின்றான்; இளையோர் உணர்வுகளைக் கொன்று கெடுத்துவிட்டுக் கூசாமல் பேசுகின்றான்; காசுக்கும் மாசுக்கும் கண்ட படிஎழுதும்;
* சாவில் வருமானம் - இறந்தால் மானம் வரும். |