பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 141

அரங்கேறும் மொழியாளர் பொழிவார்கள் சொல்லை
ஆனாலும் அவர்வாழ்வில் தொடர்பேதும் இல்லை
நிறமாறும் பச்சோந்தி மரபாளர் சொல்லில்
நினைகின்ற பயனேதும் விளைவாவ தில்லை

-அயில்

அயலாரும் துணிவோடு சதிராடு கின்றார்
அறிவாளர் திறம்யாவும் விழலாக நின்றார்
மயலோட மதிவாழ ஒருநாளும் எண்ணார்
வழியேதும் தெரியாத விழியாத கண்ணார்

-அயில்

புயலாகப் பகைசூழும் பொழுதாதல் கண்டும்
புழுவாக இனம்வீழும் நிலையாவுங் கண்டும்
செயல்காணத் துணிவேதும் உருவான துண்டா?
சிறிதேனும் உணராமல் சிலையாக நின்றார்

-அயில்

பெரியாரும் அறிவாளர் பலபேரும் வந்து
பெரும்பாடு பட்டாலும் உருவான தென்ன?
அறியாமை இருள்மூழ்கித் தடுமாறு கின்றார்
அணுவேனும் நகராமல் மரமாகி நின்றார்

-அயில்

24.6.1979