பக்கம் எண் :

156கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

26. ஏற்றம் பெறுமா இந்தியா?

தீண்டுதல் குற்றம்; தெருவிடை நடக்க
வேண்டுதல் குற்றம்; விழியாற் பார்ப்பது
மிகப்பெருங் குற்றம்; மிதியடி யணிந்து
நடப்பது குற்றம்; நாயினுங் கீழா
இந்திய நாட்டில் இப்படி ஓரினம்
சொந்த நாட்டில்நொந்து தவித்தது;
அடிமைப் புழுவெனப் படிமிசக் கிடந்தது;
மிடிமையிற் பட்டது வேதனை யுற்றது;
சிந்தனை மாந்தர் நொந்தன ராகி
இந்த நிலை ஏன்? என்றனர் ஏங்கி
“அவரவர் தலைவிதி” “ஆண்டவன் படைப்பிது”
“தவறில் சாத்திரம் தந்த நெறி” யென
ஒதினர் இறைவன் தூதுவர் என்போர்;
“தூதரைத் துரத்து; தொழத்தகும் இறைவன்
மேதினி மாந்தரை மேலெனக் கீழெனப்
படைத்தனன் ஆகின் உடைத்தெறி அவனை;
சாத்திரம் இதுவெனில் ஆத்திரங் கொண்டு
போர்த்திறங் காட்டு பொசுக்கு நெருப்பில்;
மதவெறி தடையெனில் மதத்தை மாற்” றெனப்
புதுநெறி காட்டிப் பொங்கினர் இருவர்;
தெற்கில் திராவிடப் பெரியார் ஒருவர்
வடக்கில் வாழ்ந்த அம்பேத்கர் ஒருவர்;
இருவர் தோன்றி எதிர்த்தன ரேனும்
சரிவரச் சமனிலை சார்ந்தில தின்னும்;
மாற்றம் வேண்டின் நூற்றுவர் வேண்டும்,
தூற்றும் மதவெறி சூழின்
ஏற்றம் பெறுமோ இந்திய நாடே?

21.12.1988