பக்கம் எண் :

28கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

பிறப்போர்தாம் இறப்பதுவே இயற்கை என்ற
      பேருண்மை உணர்ந்தொருவன் எரியை யூட்டி
வரப்போகும் இந்திக்கோர் செவ்வி ளக்காய்
      மறக்கோலங் கொண்டுடலம் வெந்து நின்றான்
அறப்போரில் நிற்பவர்க்கோர் *சின்னம் ஆனான்
      ஆண்மையுளோர் வணங்குகிற *சாமி ஆனான்;
மறக்காதீர் மறைக்காதீர்! இவனைப் போன்றோர்
      மாவீரர் பலருண்டு தமிழைக் காக்க!

தாய்மொழியைக் காக்கஎனில் உயிர்கள் நல்கும்
      தாலமுத்து நடராசன் இன்னும் உண்டு;
காய்மொழியீர்! உயிரீய வல்லார் எல்லாம்
      கனன்றெழுந்து நுமைநோக்கி விட்டால் நீங்கள்
போய்மடிய எந்நேரம் ஆகும்? உங்கள்
      புல்லடிமை ஆட்சியெலாம் நின்றா வாழும்?
பேய்மனத்தீர் பழிசுமக்க வேண்டா! நம்மைப்
      பெற்றவட்குப் பிழைசெய்தா வாழ்தல் வேண்டும் ?


*இந்தி எதிர்ப்பில் எரியூட்டிக் கொண்ட சின்னசாமி