9. மாவீரர் பலருண்டு நிலைகெடுக்க வருமிந்தி மொழியெ திர்க்க நேர்வருவோர் போர்தொடுப்போர் தம்மை எல்லாம் தலைஎடுப்பேன் கையறுப்பேன், என்று வீரம் சாற்றுகின்ற நாப்பறையா! ஆள்வோர் உன்னை விலைகொடுத்து வாங்கியதால் உன்றன் தாயை விற்றுவிடத் துணிந்தனையோ? வீசும் எச்சில் இலைபொறுக்கும் நாய்க்குணத்தை விட்டொ ழிப்பாய் ஈங்குன்னை ஈன்றவள்யார்? தமிழ்த்தாய் அன்றோ? மாற்றாரின் அடிக்கடிமை யாகி நின்று மதிகெட்டுத் தறிகெட்டு மானம் விட்டுத் தூற்றாதே, கூலிக்கு வருமு னக்குத் துணிவிருப்பின் தமிழ்காக்கும் எமக்கு மட்டும் தோற்றாதோ அத்துணிவு? துணிந்து நிற்போம் தொழுதடிமை செய்யகிலோம் சாவும் ஏற்போம் கூற்றாக வருமொழியைத் துரத்தி நிற்போம் கொடுமைக்கும் மிடிமைக்கும் அஞ்சோம் வெல்வோம். சாவதற்கும் துணிந்தெழுந்த மறவர் கூட்டம் தமிழ்காக்க முன்னணியில் நிற்றல் காணீர்! போவதற்குள் நுங்கொடுமை மாய்த்து விட்டுப் புகழ்காப்போம் தமிழ்காப்போம் மானங்காப்போம்; மேலவர்க்குத் தாள்பிடிப்பீர்! எம்மைக் கொன்று மேலெழும்பும் குருதிக்குள் கொடுங்கோல் தோய்த்து யாவருக்கும் செங்கோலாக் காட்டி நிற்க ஆய்ந்தவழி செய்தீரோ? ஆளும் பார்ப்போம்; |