26 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
மையிருண்ட மேகமெனச் செந்நீர் சிந்த மாணவர்தம் மார்பகத்தே குண்டு பாய்ந்து மெய்யிருந்த உயிர்குடித்துச் சென்ற தந்தோ! மேலவர்தம் ஆட்சியில் இம் மாட்சி கண்டோம்! பன்முறையால் இந்தியினைப் புகுத்த எண்ணிப் படுதோல்வி கண்டபினும், மக்கள் மன்றில் புன்முறையால் இழிமொழிகள் பேசக் கேட்டுப் பொன்றுயிராய்க் குற்றுயிராய்க் கிடந்த போதும் வன்முறைதான் பேசுகின்றார்; பட்டா ளத்தை வரவழைப்போம் இந்தியினைத் திணிப்போம் என்ற பொன்மொழியே உதிர்க்கின்றார்; மக்களாட்சிப் பூமாலை இவர்கையிற் படும்பா டென்னே! எப்படியும் இந்தியினைத் திணிப்ப தென்றே எண்ணிமுடி வெடுத்துள்ளார் வடக்கில் வாழ்வோர் ஒப்புடைய செயல்செய்ய எண்ண வில்லை; உயர்ந்தவர்சொல் அவர்செவியில் ஏற வில்லை; அப்படியே விடுமெண்ணம் எமக்கும் இல்லை அவரவர்க்குந் தாய்மொழியுண் டென்று ணர்த்தி இப்படியில் தமிழ்மொழியின் உரிமை காக்க எழுந்துவிட்டோம் இரண்டிலொன்று பார்த்தே நிற்போம். தொன்றுதொட்ட தமிழ்மொழியின் எழுத்துக் கெல்லாம் தூயவரி வடிவுண்டு தெளிவும் உண்டு கொன்றுவிட்டுத் தமிழெழுத்தை அவர்தம் தேவ நாகரியாம் குறுக்கெழுத்தைக் கொணர்வ தற்கே நின்றுவிட்டார் வடபுலத்தார்; ஒருமைப் பாட்டை நிலைநிறுத்தும் நோக்கமென உளறுகின்றார் நன்றுகெட்ட அவர்நினைவை மாய்ப்ப தற்கு நாமிங்கு மனத்துணிவு பூண்டு விட்டோம். 18.11.1967 |