பக்கம் எண் :

30கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

11. தமிழே வெல்லும்

காலத்தைக் கடந்தமொழி கற்போர் நெஞ்சைக்
      கவருமொழி தரைகடந்து கடல்க டந்து
ஞாலத்தை வென்றமொழி என்றுங் குன்றா
      நாவன்மை படைத்தமொழி இலக்க ணத்தின்
கோலத்தை முழுமைபெற வடித்துக் காட்டும்
      குறைவில்லா அறிவுமொழி இலக்கி யத்தின்
மூலத்தைக் கண்டமொழி சுவைகள் விஞ்சும்
      மும்மைமொழி அன்புமொழி தமிழே யாகும்.

பெருமைஎலாம் பூண்டுலகை ஆண்டு வந்த
      பேராற்றல் பெற்றமொழி வளமே யில்லா
*வறுமொழியால் சிறுமொழியால் அடிமையுற்று
      வாழ்விழந்து போய்விடுமோ? படையெ டுத்த
பெருமொழிகள் பலபொருதும் வாகை சூடிப்
      பீடுபெறு வீரமொழி கைகால் இல்லா
ஒருமொழிக்குத் தோற்றிடுமோ? தன்னை நோக்கி
      ஊறுசெய எதுவரினும் வெல்லும் வெல்லும்.


*வறிய மொழியால்