பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்31

12. செல்லடி செல்லடி
இந்திப் பெண்ணே

நில்லடி நில்லடி இந்திப்பெண்ணெ - உன்
      நெஞ்சினில் என்ன துணிச்சலடி!
சொல்லடி சொல்லடி இந்திப்பெண்ணே - உன்
      சூடு சுரணைகள் அற்றனவோ!

மூன்று முறையிங்கு வந்தனையே - நீ
      மூக்கறு பட்டுமே சென்றனையே!
ஏன்தமிழ் நாட்டினை நாடுகிறாய்? - பின்
      ஏனடி பட்டதும் ஓடுகிறாய்?

சான்றவர் சொல்லையும் மீறுகிறாய் - படி
      தாண்டிப் பிறர்மனை ஏறுகிறாய்
ஈன்றவர் கண்ணெதிர் நாறுகிறாய் - உனை
      ஏற்பவர் யாரெனத் தேடுகிறாய்

ஏற்பவர் தோள்களைத் தொற்றிடடி - மனம்
      ஈபவர் கால்களைச் சுற்றிடடி
மேற்படி வேலையைக் கற்றிடடி - எம்
      மீதினில் ஆசையை விட்டிடடி

மாட்சிமை ஏதொன்றுங் கற்றிலைநீ - நல்
      மானமும் தோற்றமும் உற்றிலைநீ
ஆட்சியில் நற்றிறம் கற்றிலை நீ - ஓர்
      ஆணவம் மட்டுமே பெற்றனைநீ