பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்39

பிறப்புரிமை எமக்குண்டு, பேசுமொழி
      காத்திடுவோம், பிறந்த நாடும்
சிறப்புறவே செய்திடுவோம், திருநாடு
      யார்சொத்து? தெளிந்து சொல்க
மறுப்புரைக்க வாயுண்டோ? மனமறிந்த
      பொய்யுண்டோ? வஞ்ச நெஞ்சைத்
திறக்கின்றீர் இந்தியினைத் திணிக்கின்றீர்
      ஒற்றுமையைத் தீக்குள் விட்டீர்.

எம்மொழியும் சமமாக இனியதொரு
      வழிசெய்க இணைந்து வாழ்வோம்
நும்மொழிதான் கோலோச்ச நுழைப்பீரேல்
      தனிநாடு நொடியில் தோன்றும்;
நன்மையெனிற் கைகொடுப்போம் நலிவுதரிற்
      போர்தொடுப்போம் நயச்சொல் பேசும்
எம்மொழியும் இனிவேண்டா எழுதுங்கள்
      சட்டத்தில், இதுதான் நேர்மை.

7.3.1987