பக்கம் எண் :

40கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

16. பொய்த்த வாய்மொழிபோதும்

*ஏழு மாநிலம் ஆளவோ? - பதி
      னேழு மாநிலம் தாழவோ?
பாழும் அந்நிலை காணவோ? - யாம்
      பாரி லேபழி பூணவோ?

உங்கள் தாய்மொழி இந்தியாம்-நீர்
      ஓம்பிப் போற்றுதல் நன்றியாம்
எங்கள் தாய்மொழி செந்தமிழ் - அதை
      ஏத்திக் காத்திடல் எம்கடன்.

கட்டில் ஏறிட இந்தியோ? -எமைக்
      காக்குந் தாய்மொழி பிந்தியோ?
சுட்டு வீழ்த்தினும் விட்டிடோம்-உயிர்
      சோரு மாகினும் கட்டுணோம்

வஞ்ச வாய்மொழி நம்பினோம்-பயன்
      வாய்த்த லின்றியே வெம்பினோம்
நெஞ்சில் உண்மையைக் காட்டுவீர் - அதை
      நேரில் சட்டமென் றாக்குவீர்

பெற்ற விடுதலை பொய்க்கவோ? அப்
      பேறு நீங்களே துய்க்கவோ?
மற்ற வர்க்கது கைக்குமோ? - இம்
      மாநிலம் யாவும்நும் கைக்குளோ?


* இந்தி பேசும் மாநிலங்கள்