பக்கம் எண் :

46கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

21. போருக்கு வா!

யாருக்கு நீயஞ்சிச் சாகிறாய்? - மொழிப்
போருக்கு வா! எங்குப் போகிறாய்?
பாருக்குள் நீஇன்று மூத்தவன் - தமிழ்
வேருக்கு நீபுனல் வார்த்தவன்.

வீட்டுக்குத் தூணென நின்றனை- களி
யாட்டுக்கு வாழ்வினைத் தந்தனை
நாட்டுக்கு யாரிங்குக் காவலோ? - வட
நாட்டுக்கு நீயென்ன ஏவலோ?

*ஓட்டுக்கு வந்தவன் ஆளவோ? - பட
கோட்டிக்கு நாடின்னும் தாழவோ?
ஆற்றுக்குள் காத்தனன் என்பதால்- தமிழ்
நாட்டுக்குங் காவலன் என்பதோ?

கோட்டைக்குள் ளேஒரு கும்பலோ?-ஒரு
கோட்டுக்குள் ளேவிழும் வெம்பலோ?
தேட்டைக்குள் வாழ்வரை நம்பவோ? -இனும்
*கேட்டுக்குள் வீழ்ந்துளம் வெம்பவோ?

நேற்றைக்கு நீயிங்கே ஆண்டவன் - அரி
யேற்றையும் விஞ்சுரம் பூண்டவன்
கூற்றுக்கு நேர்நிற்க அஞ்சிடாய்-தமிழ்
நாற்றுக்கு நீர்விடக் கெஞ்சினாய்


*ஓட்டுக்கு - ஓடம் ஓட்டுவதற்கு, *கோட்டுக்குள் - கிளையில்