பக்கம் எண் :

48கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

22. வாகை சூடு

பண்பட்ட மொழியொன்று கண்டாய்- அது
      பழுதாகி எழில்போதல் பாராது நின்றாய்
கண்பெற்றுங் குருடாக நின்றால் -பாரில்
      கைகொட்டிச் சிரியாரோ காளையுனைக் கண்டால்?

மொழிகாக்க ஒருநோக்கு வேண்டும்-தமிழ்
      முன்னேறும் முன்னேறும் முழுதாக யாண்டும்
பழியாக்கும் பலநோக்கங் கொண்டால் - கட்சி
      பார்த்தாலுன் தமிழன்னை பாராளல் உண்டோ?

ஒருகோட்டில் நீயிங்கு நின்றால்-போரில்
      உனைவெல்ல நினைவாரும் உலகெங்கும் இன்றாம்
வருவார்க்கு நீயொன்று சொல்வாய்- கையில்
      வாளுண்டு தோளுண்டு வழிகாண என்பாய்

வெறிநோக்கம் குறுநோக்கம் என்பார் - அந்த
      வீணான சொல்லாலே வீழாதே அன்பா
பெருநோக்கம் தமிழ்காத்தல் ஒன்றே- என்று
      பீடாக நின்றோது பேடில்லை என்றே

மொழிகாக்க முனையாத நாடு -பாரில்
      மூலைமுடுக் கெங்குமுண் டாவென்று தேடு
வழிகாட்டி நிற்றல்கண் கூடு - போரில்
      வாளுக்குந் தோளுக்கும் வாகைதனைச் சூடு

அங்கங்கே மொழிகாத்தல் உண்மை - அஃ(து)
      அவ்வவர்க் கியல்பாக வாய்த்ததோர் தன்மை
இங்குள்ள மாந்தர்க்கு மட்டும் - அதை
      இடித்திடித் தெந்நாளும் சொன்னால்தான் எட்டும்.

9.3.1987