50 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
24. அந்த நாள் வந்தே தீரும் `உறவுக்குக் கைகொடுப்போம் எங்கள் நாட்டின் உரிமைக்குக் குரல்கொடுப்போம்' என்று பல்கால் குரல்கொடுத்தும் பயனொன்றும் விளைய வில்லை; கொதித்தெழுந்தே ‘உயிர்கொடுப்போம்’ என்று சொன்னோம்; விரலெடுத்துச் செவிவழியை அடைத்துக் கொண்டார்; `விடுதலையாற் பெறும்பயனை நமக்கு மட்டும் தரமறுத்தால் உயிரெடுப்போம்', எனமு ழங்கும் தமிழ்த்திருநாள் ஒன்றிங்கு வந்தே தீரும்! ஆண்டமொழி அடிமையென ஆவதென்றால் ஆர்பொறுப்பர்? தன்மான உணர்வு நெஞ்சில் பூண்டறுந்து போனதுவோ? , எனவெ தும்பிப் பொறுமையுடன் இசையரங்கில் தமிழிற் பாட வேண்டுமென ஆண்டுபல வேண்டி நின்றோம் வீணரினும் பிறமொழியே பாடு கின்றார்; ஈண்டினியும் பாடுவரேல் இசைய ரங்கை இடித்தெறியும் நாளொன்று வந்தே தீரும்! எவர்படைத்தார் கற்சிலையை? கோவில் தம்மை எவரெடுத்தார்? தமிழ்புகுதத் தடையா? அந்தத் தவறிழைத்தார் யாரிங்கே? ஆண்ட வர்க்குத் தமிழென்றால் நச்சுமிழும் எட்டிக் காயா? சுவரெடுத்துத் தமிழுரிமை தடுப்ப தென்றால் சுடுகாட்டுப் புதைகுழியின் பிணமா நாங்கள்? உவர்நிலத்தில் இடும்வித்தா? அவற்றை யெல்லாம்- உடைத்தெறியும் நாளொன்று வந்தே தீரும்! |