ஆகாச வாணிக்குக் கால்க ளான அரியதமிழ் வானொலியைத் திருப்பி விட்டால் வேகாத மொழிகளிலே எழுதி வைத்த விளங்காத பாடல்களே செவியில் வீழும்; சாகாமல் இருக்கிறதே எனும்நி னைப்பில் தமிழிசைக்குச் சிறுபொழுதை ஒதுக்கி வைக்கும்; நோகாமல் முறையிட்டோம் பயனே இல்லை; நொறுக்குகிற நாளொன்று வந்தே தீரும்! `பொறுக்கும் வரை பொறுத்திருந்தோம் பொறுத்த நம்மைப் புழுவென்று கருதுகின்றார்; குனிந்து கொண்டே இருக்கும்வரை ஏறுபவர் ஏறிப் பார்ப்பர்; இளைஞர்படை நிமிர்ந்தெழுந்து வீறு கொண்டால் தருக்குடையார் தலையுருளும் உடல்கள் சாயும் தன்மானப் போர்முரசம் முழங்கும்' என்று வெறுப்படைந்தோர் எழுச்சிகொளா முன்னர் இங்கே விடுதலையைத் தமிழ்நாட்டிற் பரவச் செய்வீர். 29.9.1979 |