94 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
கார்முகிலின் வருகையினால் மயில்கள் ஆடும் கருவானில் மழைவரலால் பயிர்கள் கூடும் ஏர்முனையின் வருகையினால் நிலம்சி ரிக்கும் எழில்வண்டின் வருகையினால் மலர் சிரிக்கும் ஊர்மதியம் விண்வரலால் இன்பம் பொங்கும் உயர்புலவீர் நும்வரவால் எங்கள் நெஞ்சம் கூர்மகிழ்வு கொண்டின்பம் பெருக நின்றோம் குழுமிவரும் தமிழ்ப்பெரியீர் வருக வாழ்க! பாரெல்லாம் தமிழ்நெறியே செழிக்க வேண்டும் பல்வகைய புதுநூல்கள் தோன்ற வேண்டும் ஊரெல்லாம் புலவர்தமைப் போற்ற வேண்டும் உயர்வதனால் தமிழ்மொழிக்குச் சேர்தல் வேண்டும் சீரெல்லாம் மேவிவர வலிமை கொண்ட செயற்குழுவாய்ப் புலவர்குழு வளர்தல் வேண்டும் பேரெல்லாம் பெற்றபெரும் புலவீர் வாழ்க! பேணுமுயர் நாடுமொழி வாழ்க! வாழ்க! (காரைக்குடிக்கு வருகைதந்த தமிழகப் புலவர் குழுவிற்கு வரவேற்பு) 18.10.1969 |