எந்தத் துணைகொண்டிங் கெந்தமொழி வந்தாலும் நோவுக்கும் அஞ்சோம் நொடிப்பொழுதில் வீழ்கின்ற சாவுக்கும் அஞ்சோம் தமிழ்காப்போம் என்றெழுந்த அஞ்சலிலாக் கூட்டத்தை ஆளவந்தோர் தாக்கியதால் நெஞ்சிருந்து சிந்தி நெடிதோடுஞ் செங்குருதி பாய்ந்து தமிழ்மொழியாம் பைங்கூழ் செழிப்பதனால் ஆய்ந்தமொழி செந்தமிழென் றானதென நானுரைப்பேன்; ஆரியத்தார் ஆட்சிமுதல் ஆங்கிலத்தா ராட்சிவரை சீரழித்த ஆட்சிகளைச் செப்பத் தொலையாது; தேன்மொழியாந் தென்மொழியின் சீர்மை பரவிவர மீன்புலிவில் ஏந்திநல் மேலோர் துணைநின்று காத்ததிரு நாட்டிற் கதவு திறந்திருக்கப் பார்த்திங்கு வேற்றுப் பகைமொழிகள் உள்நுழைந்து நீக்கமற எங்கும் நிறைந்தாலும் நம்மினத்தார் தூக்கங் கலையாமல் சோர்ந்து கிடந்தாலும் நான்வணங்குந் தெய்வ நலமிக்க செந்தமிழ்த்தாய் தேன்வழங்கும் நாண்மலர்போல் என்முன் திகழ்கின்றாள்; அன்னை திருமுகத்தில் அணுவளவும் சோர்வின்றி என்னை வளர்க்கின்றாள் இவ்வுலகைக் காக்கின்றாள்; தெவ்வர் எவர்வரினுந் தென்மொழிக்குக் கேடில்லை; எவ்வெவர் சூழினும் ஏதும் இடரில்லை; ஆற்றல் குறையாமல் அம்மொழித்தாய் நின்றாலும் ஏற்ற இடமின்றி ஏனோ தவிக்கின்றாள்? சீர்மை குறையாமல் செம்மை சிதையாமல் நேர்மைபிறழாமல் நின்றாலும் அம்மகளை உற்றாரும் பெற்றாரும் உற்ற துணையாரும் அற்றாரைப் போல அலைய விட்டுவிட்டோம்; கல்வி தருங்கோயிற் கட்டடத்துட் செல்வதற்குச் செல்வி தயங்குகிறாள் செல்லும் உரிமையின்றி; மூவேந்தர் ஆண்ட முறைதெரிந்தும் செங்கோலைத் தாயேந்த இங்கே தடையுண்டாம்; அங்காடி சென்றுலவ ஒட்டாமற் சேர்ந்து விரட்டுகிறோம்; |