98 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
நின்றுமனம் ஏங்கி நிலைகலங்கச் செய்கின்றோம்; பாட்டரங்கிற் சென்றிருந்தால் பைந்தமிழ் கேட்பதிலை கூட்டுமொழிப் பாடல்களே கோலோச்சக் காண்கின்றோம்; எங்கெங்கு நோக்கினும் இங்கே புகுந்தமொழி அங்கங்கே ஆட்சிசெய் தார்ப்பரிக்கக் காண்கின்றோம்; செம்மை யுறுமொழிக்குச் சீரில்லை பேரில்லை; செம்மை யுறாமொழிக்குச் சீருண்டு பேருண்டு; பாலறியாப் பச்சைப் பகட்டு மொழிதனக்குக் கோலுரிமை ஈயுங் கொடுமை நிலைகண்டோம்; தாரமெனுஞ் சொல்லைத் தயங்காமல் ஆண்பாலாக் கூறும் மொழியுண்டு; கொங்கை எனுமொழியை ஆண்பா லெனவுரைக்க அஞ்சா மொழியுண்டிங் காண்பா வனென் றறிய வுணர்த்துகிற மீசை எனுஞ்சொல்லை மேதினியிற் பெண்பாலென் றாசையுடன் பேசும் அழகு மொழியுண்டு; செம்மை ஒருசிறிதுஞ் சேராச் சிறுமொழிக்கு அம்ம எனவியக்க ஆக்கம் பலவுண்டு; பண்டே திருந்தியநற் பண்புடனே சீர்த்தியையும் கொண்டே இயங்கிவரும் குற்றமற நின்றொளிரும் தூய்மொழியாம் தாய்மொழியைத் தொன்மைத் தனிமொழியைச் சேய்மையில் தள்ளிவிட்ட சேயாகி நிற்கின்றோம்; நற்றவத்தால் நம்நாடு நல்லோர்தம் கையகத்தே உற்றமையால் அன்னை உறுதுயரம் நீங்குமினி; எங்கெங்குந் தாய்மொழிக் கேற்றம் மிகக்காண்போம் இங்கினிநம் செந்தமிழ்க்கோர் ஏறுமுகம் ஈதுறுதி எங்குந் தமிழாகும் எல்லாந் தமிழாகும் பொங்கும் இனிமேற் பொலிந்து. (கவியரங்கம் - தருமபுரம் திருமடம், 13.05.1968) |