49. தமிழில் மறுமலர்ச்சி கலிவெண்பா பூக்குஞ் செடிகொடியில் போதாய் ஒருமுறைதான் பூக்கள் மலரும்; புவியோர் மலர்ச்சியென்பர்; காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமலர் வாடி முடிந்துவிடின் மீண்டும் மலர்ச்சியிலை; மீண்டும் மலர்வதைத்தான் யாண்டும் மறுமலர்ச்சி என்று புகன்றிடுவர்; தெவ்வர் பலவகையாற் செய்துவிட்ட தீமைகளால் செவ்வையுற வாழ்ந்ததொன்று சீர்கெட்டு வாடியபின் மற்றுமொரு வாய்ப்பதனால் வாழ்வுயர்ந்து சீரடைந்தால் கற்றவர்கள் அந்நிலையைக் காணின் மறுமலர்ச்சி என்று மொழிவர் இதற்கொரு சான்றுரைப்பேன்; சென்று முகில்புகுந்து செல்லும் முழுமதிதான் தேய்ந்து குறைந்துவரும் தேய்ந்தாலும் மீண்டும்ஒளி தோய்ந்து வளர்ந்துவரத் தோன்றும் மறுமலர்ச்சி; காலத்தால் முந்துமொழி காப்பியங்கள் தந்தமொழி ஞாலத்து மூத்தமொழி நல்லறங்கள் பூத்தமொழி என்றெல்லாம் சான்றோர் இசைக்குமொழி செந்தமிழ்தான் அன்றிந்தத் தென்னாட்டில் ஆட்சி செலுத்தியது; எப்படியோ யார்யாரோ இந்நாட்டி னுட்புகுந்த தப்பதனால் எல்லாத் தவறுகளும் நேர்ந்துவிடப் புன்மைச் செயலுக்குப் புத்தியைநாம் ஒற்றிவைத்தோம் நன்மலர்ச்சி குன்றி நலங்கெட்டு வாடியதே! |