100 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
ஆனாலும் நல்லவர்தாம் நாட்டிற் பலர்தோன்றி மேனாளில் ஊட்டும் உணர்வதனால் தாய்மொழிக்கு நாட்டாட்சி வேண்டுமென நல்லுரிமைப் போர்புரிந்தோம் கேட்டாட்சி செய்தோர்தாம் கேளாராய் வந்தெதிர்த்தார்; தானே இயங்குந் தகுதிபெற்று வாழ்ந்தமொழி தேனே எனத்தக்க தெள்ளத் தெளிந்தமொழி வேற்று மொழிச்சொற்கள் வீணே கலந்தமையால் நேற்றுவரை தாழ்ந்து நிலைகுலைந்து வீழ்ந்தமையால் கண்ட மறைமலையும் கல்யாண சுந்தரரும் தொண்டு மனங்கொண்டு தூற்றலுக்கும் அஞ்சாது நாடோறும் பாடுபட்டு நல்ல தமிழ்வளர்த்தே ஈடேறச் செய்தார்கள்; ஈடில்லாச் செந்தமிழே மீண்டும் மலர்ச்சிபெற்று மேலும் உணர்ச்சியுற்று யாண்டும் மணம்பரவ ஏற்றம் மிகக்கண்டோம்; காஞ்சி புரத்தண்ணல் கற்ற அரசியலில் நீஞ்சி வரும்அறிஞர் நெஞ்சார்ந்த பேருழைப்பால் பாச்சுவையின் மேலாகப் பாரோர் சுவைத்து வரும் பேச்சால் எழுத்தால் பெறுமோர் மறுமலர்ச்சி நாடறியும் ஏடறியும் நல்லவர்தம் நாவறியும் கூடலர்தம் நெஞ்சறியும் கோல்கொண்டார் வீடறியும் எங்கள் தமிழ்மொழிக் கீதோர் மறுமலர்ச்சி எங்கும் பரவும் இனி. கவியரங்கம், திருப்பத்தூர், 8.6.1965 |