பக்கம் எண் :

104கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

34
வள்ளுவர் உலகில்...

7. பகைவர்கள்

தன்மான உணர்வுக்குத் தீங்கு நேரின்
       தளராமல் இளைதாக முள்ம ரத்தை
முன்மாளச் செய்திடவே முனைந்து நிற்பர்;
       முற்றியபின் களைந்தெறிய முயல்வ துண்டோ?
பின்மாறும் கேள்போலப் பகைவ ரில்லை;
       பிழையாத வாள்போலும் பகைவ ருண்டு;
மின்கோல வாழ்வுதனை நச்சி நின்று
       மேவாரைச் சார்ந்தொழுகும் கயவ ரில்லை.

நேருக்கு நேர்நிற்கும் பகைவ ருண்டு
       நிழலுக்குள் பதுங்கிவரும் பகைவ ரில்லை;
போருக்குள் விலகாத பகைவ ருண்டு
       புன்மைக்குள் வீழ்கின்ற பகைவ ரில்லை;
மாருக்குள் வேல்தாங்கும் பகைவ ருண்டு
       மானத்தை விலைபேசும் பகைவ ரில்லை;
வீறுக்கு வீறுசெயும் பகைவ ருண்டு
       விழலுக்கு நிகரான பகைவ ரில்லை.