பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்103

போர்முனையில் வாரிவிடும் குதிரை போலப்
       புகுந்திடர்கள் சூழுங்கால் ஓடி விட்டுச்
சேர்பொருள்கள் மிகுபொழுதில் குழைந்து வந்து
       சிரித்துவிளை யாடிமகிழ் நண்ப ரில்லை;
தார்புனையும் வில்வணக்கம் போல்வ ணங்கும்
       தந்திரஞ்சேர் சொல்வணக்கம் செய்வா ரில்லை;
நேர்மொழிகள் பலபேசி வினைகள் வேறு
       நிகழ்த்துகிற நட்பினரும் அங்கே யில்லை.

நகையேயும் பகைவேண்டார்; புலமை தோய்ந்த
       நயமிக்க சொல்லுழவர் பகைமை வேண்டார்;
பகைமையையும் நட்பாக்கிப் பழகு கின்ற
       பண்புடையார்; நயவஞ்சம் சிறிது மில்லார்;
மிகைசெய்து தம்மூரார் பகைமை கொள்ளார்;
       மேலோரைப் பழித்துரையார்; பிறன்பொ ருட்குத்
தகுதியிலா ஆசை கொளார்; நாடு காக்கும்
       தன்மானப் பெருமையன்றிச் சிறுமை யில்லார்.