பக்கம் எண் :

102கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

33
வள்ளுவர் உலகில்...

6. நண்பர்கள்

பொய்யாத மொழியான்றன் உலகில் நண்பர்
       புடைசூழ நான்வந்தேன்; அவர்தம் கேண்மை
*எய்யாமல் வளர்மதிபோல் வளரக் கண்டேன்
       எனதுதமிழ் நூல்நயம்போல் இனிக்கக் கண்டேன்;
மெய்யாக அகம்நகவே பழகி நிற்பார்;
       மேலொருகால் இடுக்கண்வரின் உடுக்கை காக்கும்
கையாக வந்துதவிக் காத்து நிற்பார்;
       கள்ளமிலா உணர்ச்சியினால் கிழமை கொள்வார்.

குடிபிறந்த ஒழுக்கத்தார், பழியை அஞ்சும்
       கொள்கையினார், மனத்துக்கண் மாசு தீர்ந்தார்;
இடித்துரைத்துத் திருத்திவரும் இயல்பு கொண்டார்;
       என்றேனும் நோதக்க செய்து விட்டால்
வெடித்தெழுந்து சினங்கொள்ளார்; உரிமை தன்னால்
       விளைவறியாப் பேதமையால் நிகழ்ந்த தென்று
துடைத்தெறியும் நண்பரவர்; அவர்தம் நட்பால்
       தோளெல்லாம் பூரித்து நிமிர்ந்து நின்றேன்.


*எய்யாமல் - இளைக்காமல், அஃதாவது குறையாமல்