பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்121

கண்மூடிக் கிடந்தாலும், எங்கட் காகக்
       காலமெலாம் உழைத்துழைத்துப் பழுத்த மெய்யை
மண்மூடிக் கிடந்தாலும், துயரம் எங்கள்
       மனமூடிக் கிடந்தாலும், கண்க ளெல்லாம்
தண்ணீரிற் கிடந்தாலும் எமக்குத் தந்த
       தன்மானப் புத்தகத்தை மூட மாட்டோம்;
கண்மூடிப் பழக்கங்கள் சாயும் மட்டும்
       கடமைப்போர் ஆற்றுவதில் ஓய மாட்டோம்.

ஈரோட்டுப் பாசறையில் பயிற்சி பெற்ற
       எதையுமஞ்சாப் போர்வீரர் சூழ்ந்து நிற்கப்
போராட்டம் போராட்டம் என்று சொல்லிப்
       போராடிக் காலமெலாம் வாழ்ந்த வேந்தே!
நீரோட்டம் அற்றாலும் எங்கள் நெஞ்சில்
       நீகாட்டும் போராட்டம் ஓய்வ தில்லை;
வேbராட்டும் பேரால மரமே உன்றன்
       விழுதுகளாய் நின்றிருந்து கொள்கை காப்போம்.

தந்தை பெரியார் இயற்கை எய்திய
செய்தி கேட்டுப் பாடியது
24.12.1974