120 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
சமுதாய மருத்துவனே! ‘பிணியுற் றோனைச் சாகாமல் காப்பதுதான் எனது கொள்கை அமுதான இனியமருந் தென்பா லில்லை; அறுவைசெயும் மருத்துவன்நான்; நோயுற் றுள்ள குமுகாயம் வருந்தினுமோர் கவலை யில்லை; குற்றுயிராய்ச் சாகவிடேன்’ என்றுகூறி எமைமேவும் பிணிநீக்கி மான முள்ள இனமாகத் தலைநிமிரும் வாழ்வு தந்தாய்! உடல்நலமும் உயிர்நலமும் கருதா தெங்கள் உயர்வுக்கே உள்ளளவும் உழைத்திருந்தாய் விடுமுயிரைத் தாழ்ந்திருக்கும் தமிழி னத்தின் விடுதலைக்கே விடுவேன்என் றுழைத்து நின்றாய் அடலரியே ஆருயிரே எம்மி னத்தின் அடிமைதனை அகற்றவந்த தலைவா நாங்கள் படுதுயரை எவ்வண்ணந் தாங்கிக் கொள்வோம்? பகலவனே பயணத்தை ஏன்மு டித்தாய்? கண்மூடிக் கிடந்துழன்ற தமிழி னத்தைக் கண்டுமனம் நொந்தெழுந்து தட்டித் தட்டிக் கண்திறக்க வைத்தாயே! திறக்கும் போது கண்ணெல்லாம் குளமாகச் செய்து விட்டுக் கண்மூடிக் கொண்டாயே! ஐயா உன்றன் கடமைஎலாம் முடிந்ததென்றோ? நினது மெய்யை மண்மூடிக் கொண்டாலும் ஐயா எங்கள் மனமெல்லாம் நீயிருக்கத் திறந்து வைத்தோம். |