பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்119

3
தன்மானப் புத்தகத்தை மூட மாட்டோம்

கேட்டதடா ஒருசெய்தி தொண்டு செய்தே
       கிழமான பழமொன்று விழுந்த தென்றே;
போட்டதடா என்னெஞ்சில் பாராங் கல்லைப்
       பொழுதுபுலர் நேரத்தே அந்தச் செய்தி;
கேட்டழுகை வரவில்லை எனது கண்ணில்
       கிறுக்குற்ற எனதுமனம் அழுத தாலே;
பாட்டெழுத வரவில்லை எனது கையே
       பகலவனைத் தொழுதழுது புலம்ப லாலே.

நெஞ்சுரத்தை மட்டுமொரு துணையாக் கொண்டு
       நீபட்ட பாட்டையெலாம் நினைந்த தன்றி
அஞ்சலிக்கு நானெழுதும் பாட்டை என்றன்
       அகங்கருத முடியாமல் தவித்த தையா!
வெஞ்சினத்து *மடங்கலுக்கு நிகராய் வந்த
       வெண்தாடி வேந்தேஎன் புலம்ப லாலே
நெஞ்சுருக்கும் என்துயரப் பாட லாலே
       நினைகின்றேன் தொழுகின்றேன் ஐயா நின்னை.

ஐயாஉன் தலைமகனை அறிஞர் செம்மல்
       அண்ணாவை அன்றிழந்தோம் துயரில் மூழ்கிக்
**கையாறு மிகவுழந்தோம் நின்றன் பேரன்
       கலைஞர் தரும் ஆறுதலால் தேறி வந்தோம்;
நையாமல் நையும்வணம் இங்கு நாங்கள்
       நாதியற்று நிற்கும்வணம் பிரிந்து விட்டாய்!
ஐயா எம் ஐயாஎன் றலறு கின்றோம்
       யாரைக்கண் டாறுதலைப் பெறுவோம் ஐயா!


*.மடங்கள் - சிங்கம் ** கையாறு - செயலற்ற நிலை