பக்கம் எண் :

118கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

பாட்டனன்றோ? ஆற்றலெலாம் பாடி முடிவதுவோ?
ஒப்பரிய நற்றலைவர் ஆனாலும் ஓர்பொழுதும்
தற்செருக்குக் காட்டாத் தலைவர் அப் பண்பால்
எளிமைத் தலைவர்; எவரிடத்தும் இன்சொல்
மொழியுந் தலைவர்; முழுமைபெறும் நம்தலைவர்;
தள்ளாட்டம் உற்றும் தடுமாற்றம் இல்லாமல்
சொல்லாட வல்லஒரு சோர்வில்லாப் பேச்சாளர்;
பல்லெல்லாம் வீழ்ந்தும் பகுத்தறிவைப் பாய்ச்சுகின்ற
சொல்லெல்லாந் தித்திக்கும் சூடுங் குறையாது;
கிண்டல் நிறைந்திருக்கும் கேலி மிகுந்திருக்கும்;
கிண்டி அறிவைக் கிளர்ச்சி கொளச்செய்யும்;
சிந்தித்துக் கண்ட சிறப்புமிகும் தங்கருத்தை
எந்தச் சமயத்தும் எங்குந் துணிந்துரைக்கும்
அஞ்சாத நெஞ்சத்தை ஆரிடத்துங் கண்டதில்லை;
துஞ்சாத சிங்கத் துணிவுமிகப் பெற்றார்.
நமது தலைமுறையில் நாம்பெற்ற பேற்றால்
இமயப் புகழ்கொண்ட ஈடில் தலைவர்
நமக்குக் கிடைத்துள்ளார்; நாளும் உழைத்தே
நமக்குற்ற தாழ்வை நசுக்கித் தொலைத்துவிட்டார்;
நாமும் தமிழரென நாடாளும் மாந்தரென
*ஏமம் மிகக்கொண் டினிதிங்கு வாழ்கின்றோம்;
பெற்றதொரு நல்வாழ்வைப் பேணி மிகக்காத்து
நற்றமிழர் என்றுரைக்க நாம்வாழ்வோம் என்றுசொலித்
தந்தை பெரியாரின் தாள்வணங்கி வாழ்த்துரைத்துச்
சிந்தை மகிழ்ந்திருப்போம் சிந்தனையைப் பேணிடுவோம்
என்றுநான் சொல்லி இருகை குவிக்கின்றேன்
மன்றிலுளார் வாழ்க மகிழ்ந்து.

பெரியார் சிலை திறப்பு விழா
திண்டுக்கல்
17.9.1970


*.ஏமம் - இன்பம்