124 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
புகைபடிந்த ஓவியம்போல், சுவர்க ளெல்லாம் புழுதியடை மாளிகைபோல், கருமை கொண்ட முகில்படர்ந்த முழுமதிபோல், அழுக்க டர்ந்து மூடியஓர் பளிங்கினைப்போல், மண்ணுக் குள்ளே புகவிழுந்த பொற்சிலைபோல், பனிப டிந்த பொன்மலர்ப்பூஞ் சோலையைப்போல் தமிழர் நாடு தகவிழந்து பொலிவுதரும் அழகி ழந்து தகதகக்கும் ஒளியிழந்து நின்ற தந்தோ! கல்லடர்ந்து முள்ளடர்ந்து கள்ளி முள்ளி கற்றாழை மிகவடர்ந்து புதர டர்ந்து செல்வழிகள் தோன்றாமல் திகைத்து நிற்கச் சீர்கெட்ட பாதையெலாம் செப்ப னிட்டு நல்வழிகள் பலஅமைத்துப் புதுமை மிக்க நாடாக்க வளமாக்க உழைத்த போது பல்லிடர்கள் உற்றாலும் ஆரி யத்தின் பாம்பெதிர்த்து வந்தாலும் அயர்ந்தா ரல்லர். அஞ்சாத அரியேறு, கொடுஞ்சி றைக்கும் அடங்காத புலிப்போத்து, வாழ்நாள் எல்லாம் துஞ்சாத போர்க்களிறு, கொண்ட கொள்கை துவளாத பெருங்கரடி, எவரை யும்போய்க் கெஞ்சாத கவரிமான், உழைப்பில் சோம்பிக் கிடவாத அடலேறு, முதுமை யுற்றும் எஞ்சாது பாடுபடும் பொழுது துள்ளி எழிலாகப் பாய்கலைமான் எங்கள் தந்தை. ஊர்தோறும் பம்பரம்போல் சுற்றிச் சுற்றி உழைத்துவரும் அந்நாளில் அறியா மாந்தர் பேர்கூறி வைதார்கள், நடையன் முட்டை பிறவெல்லாம் எடுத்தெறிந்தார், கூச்சல் போட்டார் |