ஊர்கூடிக் குழப்பத்தை விளைத்து மேடை ஒளிவிளக்கை அறுத்தெறிந்தார், பாம்பை விட்டார் யார்கூடித் திரண்டெதிர்த்தும் இகழ்ந்து பேசி யாதுரைத்தும் நம்தலைவர் கலங்க வில்லை. தேரோட்டி விழவெடுக்குங் கூட்டத் தாரும் தெருவெல்லாம் கல்வைத்துப் பூசிப் பாரும் ஏரோட்டி உழைப்பாரும் கற்ற மாந்தர் எழுத்தாளர் மற்றோரும் விழித்தெ ழுந்தார்; ஈரோட்டுப் பாசறையில் வந்து சேர்ந்தார்; இனவுணர்வும் மொழியுணர்வும் பெற்ற பின்னர் தார்சூட்டி எடைக்கெடையில் பொருள் கொடுத்தார்; தலைவரவர் பொருள்புகழால் மயங்க வில்லை, இகழ்ச்சிக்கும் நம்தலைவர் கலங்க வில்லை ஏத்தெடுத்த புகழ்ச்சிக்கும் மயங்க வில்லை; மிகச்சிவந்த பகலவன்போல் கடமை யாற்றி மேற்கொண்ட பணியாற்றி வெற்றி கண்டார்; இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் செவிகள் சாய்த்தால் இயங்காது பொதுத்தொண்டு; குறிக்கோள் ஒன்றே அகத்திருக்க வேண்டுமெனும் நெறியைக் காட்டும் ஐயாபோல் தொண்டாற்ற வல்லார் யாரே? எவ்வுணவே என்றாலும் ஏற்றுக் கொள்ளும்; இரவெனினும் பகலெனினும் தொண்டு செய்யும், எவ்வழியில் என்றாலும் பயணஞ் செய்யும்; இருவிழியும் துயிலாது விழித்தி ருக்கும்; செவ்வாயில் பல்லெல்லாம் வீழ்ந்த போதும் செம்மையுறச் சொல்லெல்லாம் அவர்நா ஓதும்; ஒவ்வொருகால் நோய்வரினும் எதிர்த்து நிற்கும்; உளம்போல அவருடலும் புரட்சி செய்யும். |