பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்13

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையேன் அரசர்க்குள் ஓங்கி உயர்ந்திருப்பேன்
முப்போகம் வேண்டி முனைந்து செயல்புரிவார்
எப்போகம் வேண்டிடினும் தப்பேதும் செய்தறியார்
ஒர்பரத்தைத் தேடி உளமெல்லாஞ் சோர்ந்தாலும்
சேர்பரத்தை நாடிச் செலவறியார் என் மாந்தர்;
நானாட்சி செய்ந்நாட்டில் நாளும் புதியவரி
தானாட்சி செய்யும் தடுப்பார் எவருமிலர்;
மக்கள் வரவேற்று மன்னன் எனைநோக்கி
மிக்க மகிழ்ச்சியினால் மீக்கூர ஏத்தெடுப்பர்;
அன்பால் வருவார்க்கடி கொடுப்பேன் அப்பொழுதும்
என்பால் ஒருசிறிதும் வன்புமனங் கொள்ளார்;
தலைப்படுவார் தம்மைத் தளையிடுவேன் இட்டால்
தளைப்படுவர் அன்றித் தலைநிமிர்ந்து நோக்கார்;
கொடுங்கோலன் என்றுங் குறைசொல்லார் செங்கோல்
தொடுங்கையன் என்றே தொழுதேத்தி நின்றிருப்பர்;
பின்னை அவர்மனத்தைப் பேணிமிகு சீரெல்லாம்
அன்னை மனம்போல அள்ளி வழங்கிடுவேன்;
இவ்வண்ணம் ஆட்சிசெயும் என்பால் அணுகிவந்து
மெய்வண்ணம் அன்புமனம் மேவுஞ் செயலாளர்
கோலோச்ச என்கையிற் கொற்றங் கொடுத்துவிட்டார்
தாலோச்சும் பாட்டில் தனியாட்சி செய்யும்
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடரென்று நம்புவதால்
ஆட்சி முறையால் அரங்கைத் தொடங்குகின்றேன்
மாட்சிமை சேர் மன்றை மதித்து.

குறள் விழா, காரைக்குடி
2.3.1975