பக்கம் எண் :

12கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

தென்னாட்டின் பேரறிஞர் சீர்மை பழித்தறியேன்;
கூறுங் குறள்நெறியிற் கொற்றம் நடத்துதலால்
ஏறும் புகழ்பரவும் என்னாட்டில் ஆற்றல்மிகும்
நல்ல கலைஞருக்கு நாளும் மதிப்பளிப்பேன்;
சொல்லும் புகழ்மாலை சூட்டி வரவேற்பேன்;
போற்றி ஒரு நாளும் தூற்றி மறுநாளும்
சாற்றேன்; கலைஞருக்குத் தக்க பரிசளிப்பேன்;
அஞ்சாத நாவலர்க்கும் அண்டிவரும் பாவலர்க்கும்
எஞ்சாச் சிறப்பளிப்பேன் ஏற்றம் பெறவைப்பேன்;
ஒன்றிப் பழகிடுவேன் உள்ளத்தில் எந்நாளும்
நின்று நிலைபெறவே நீள நினைந்திருப்பேன்;
நண்பர் புடைசூழ நாளும் மகிழ்ந்திருப்பேன்;
பண்பிற் சிறந்தஎன் பட்டத் தரசியையும்
விட்டுப் பிரிந்திருப்பேன் வேண்டியஎன் நண்பர்தமை
விட்டுப் பிரிந்தறியேன் வேளைதொறும் அந்நினைவே;
மெய்யுணர்வால் என்னுளத்தில் மேவுமவர் நோதக்க
செய்துவிடின் பேதைமையாற் செய்திருப்பர் என்றமைதி
பெற்றிருப்பேன் மேலும் பெருங்கிழமை கொண்டதனால்
மற்றதனைச் செய்திருப்பர் என்றும் மனங்கொள்வேன்;
எம்மைப் பிரிக்க எவரேனும் முன்வந்து
மும்மைப் பொழுதும் முயன்றாலும் செல்லாது;
யாப்பதுதான் கோட்டை அரணாகச் சூழ்ந்திருக்கும்
காப்பியனார் செய்ததொல் காப்பியமே ஆழ்அகழி;
நண்ணார் புகமுடியா நாற்புறஞ்சூழ் கோட்டைக்கு
முன்னோன் பவணந்தி முன்வாயில் செய்தமைத்தான்;
மாமதியன் கைவல்லான் மாறன் எழுதிவைத்த
நூன்முறையால் செய்தமைத்த நுண்மாண் நெடுங்கதவை
மோதித் தகர்த்தவரும் மும்மதத்து யானைகளும்
பாதிப் பொழுதில் பரிதவித்துப் பின்செல்லும்;
மாற்றார் படையெடுத்து வந்தறியார் என்னாட்டுள்
ஏற்ற தொடைமுடித்தே என்பால் வருவார்;