பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்11

சாதி மதங்களைநான் சாடி வெறுத்தாலும்
ஓதுமதம் ஏழும் உலவிவரும் என்னாட்டில்;
செப்பம் திரண்டுவரச் செங்கோல் செலுத்துதற்கு
முப்பத் திரண்டாக முன்னோர்சொல் உத்திகளால்
குற்றங்கள் பத்துங் குலவாமல் நீக்கிவிட்டு
மற்றழகு பத்தும் மருவிவர நான்புரப்பேன்;
கூறிவரும் மக்கள் குறைநீக்க நல்வளமை
ஊறிவரச் செங்கோல் உயர்த்திப் பிடித்திருப்பேன்;
முப்பால் முகிலாகி மும்மாரி திங்கள்தொறும்
தப்பாமல் பெய்வதனால் தண்ணீர் நிறைந்திருக்கும்;
நெஞ்சம் எனும்வயலில் நேர்மைக் கலங்கொண்டு,
துஞ்சலிலா நல்லெருது தோளில் நுகம்பூட்டி,
ஆழ உழுதுழுது, அன்பென்னும் நீர் பாய்ச்சிக்
சூழறிவை வித்தாக்கித் தொன்மை உரமிட்டு,
நல்லறமாம் நாற்றின் நடுநடுவே தானாகப்
புல்லி வளர்கின்ற பொய்மைக் களைகட்டு,
நூலினர் வாய்மொழிந்த நுண்ணிய கேள்விஎனும்
வேலி அமைத்தங்கு வேளைதொறும் ஏகி,
அழுக்கா றவாமுதலாம் ஆவொடுமா பற்றி
இழுக்காமல் தின்னாமல் எப்பொழுதுங் காத்திடலால்
இன்பமுதற் பைங்கூழ்கள் என்னாட்டில் தோற்றுவித்து
துன்பமெனும் வன்பசிதான் தோன்றாமல் செய்திடுவேன்;
கொற்றஞ் செய்திருக்கக் கூறும் பெரியாரைப்
பற்றித் துணைக் கொள்வேன்; பாருக்குள் மேலாமென்
நாட்டின் முதலமைச்சர் நன்காய்ந்த பேரறிஞர்;
காட்டும் அவர்நெறியிற் காவல் புரிந்திருப்பேன்;
பேரறிஞர் காட்டும் பெருநெறியை நன்மொழியை
ஊரறியப் போற்றி உலகாண் டுயர்ந்திருப்பேன்;
போற்றும் பெரியார் புகன்ற அறிவுரையைத்
தூற்றிப் பழிக்குந் தொழிலைப் புரிந்தறியேன்;
பண்பாட்டின் சின்னமெனப் பாரோர் புகழ்ந்தத்தும்