10 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
நாயகன் நானென்று நானிலத்து மாந்தரெல்லாம் வாய்நிறையப் பாராட்டி வாழ்த்தி மகிழ்வார்கள்; உள்ளத் தெளிவுடனே ஒட்டிவரும் நல்லவர்பால் பிள்ளைத் தமிழ்மொழியாற் பேசி மகிழ்ந்திருப்பேன்; என்கொற்றம் போற்றாமல் எள்ளி வருவாரேல் பின்பற்றுஞ் செம்மாப்பு பீடுபெற நானிற்பேன்; தாழ்வுதர எண்ணித் தருக்குடையார் சூழ்ந்துவரின் வாழ்வு பெரிதன்று, வளையா பதியாவேன்; கள்ளத் தனத்தாற் கயமை புரிவாரின் பிள்ளைத் தனத்தைப் பிறழும் மயக்கத்தைப் போக்கக் கடுகம் புகட்டி, நாலடியில் காக்குமுயர் நன்னெறியைக் காட்டி, உயர்திணையாய் நல்வழியில் நாளும் நடந்திடுக என்றுசொலி அல்வழியை விட்டேக ஆற்றுப் படுத்திடுவேன்; வேற்றுமைக்கு வித்திட்டு வீண்குழப்பஞ் செய்வாரேல் கூற்றுக் கிரையாக்கக் கூராய்தம் ஒன்றுடையேன்; மெய்யை ஒழித்துவிட்டு மேவுமுயிர் வேறாகச் செய்யுந் தனிநிலைமை சேர்ந்திலங்கும் ஆயுதமாம்; வாள்பிடித்து முன்செல்வேன் வால்பிடித்துப் பின்செல்லேன் கோள்பிடிக்க அஞ்சிடுவேன் கோல்பிடிக்க அஞ்சுகிலேன்; தாள்பற்றி நின்றறியேன் தக்க கவியெழுதத் தாள்பற்றி நிற்பதுண்டு; தன்மான நெஞ்சுண்டு; சுற்றிப் பகைவருமேல் சூழ்ந்ததனைத் தூளாக்க வெற்றிவேற் கையுடையேன்; வீரமிக்க என்தோளில் சிந்தா மணிமாலை சேர்த்து மகிழ்விக்க முந்தி எழில்குலுங்க முன்னிற்பாள் வெற்றிமகள்; என்றன் தனிப்பாடல் எல்லாங் குடிமக்கள் என்றுங் குறையின்றி ஏற்றமுற வைத்திருப்பேன் |