பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்15

ஏற்ற இருகைகள் இல்லா திருக்கின்றோம்;
வண்ண மலரிருக்கும், வாசம் பரந்திருக்கும்,
கண்ணுங் களித்திருக்கக் காட்சி நிறைந்திருக்கும்,
ஓடை விரிந்திருக்கும், ஓங்கும் மரமிருக்கும்,
மேடை சிறந்திருக்கும், மெல்லியபூங் காற்றிருக்கும்,
கூவுங் குயிலிருக்கும், கூடும் எழிலிருக்கும்,
யாவும் நிறைந்திருக்கும் யாங்குமிலாப் பூஞ்சோலை
அத்தகுநற் சோலை அதனுட் புக்குலவி
மெத்தநலந் துய்த்தின்பம் மேவுதற்குக் கால்களில்லை;
மேகத் திரைக்குள்ளே மேனி மறைத்தாலும்
வேகத் தொடுமீண்டும் விண்ணில் உலவிவந்து
வட்ட எழில்முகத்தை வந்துவந்து காட்டிநலம்
கொட்டுங் குளிர்மதியைக் கோதில்லா வெண்ணிலவைக்
கண்டு களிப்பதற்கும் காட்டும் அதனெழிலை
உண்டு சுவைப்பதற்கும் உற்ற விழியில்லை;
பண்டைத் தமிழ்தந்த பண்ணமைந்த யாழிருந்தும்
சுண்டித் தெறித்தின்பந் துய்க்க விரலில்லை;
முன்னோர் வகுத்துரைத்த முத்தமிழுள் ஒன்றான
பண்ணார் இசையிருந்தும் பாடுதற்கு வாயில்லை;
கிட்டாக் குறிஞ்சிமலர் கிட்டியது கையகத்தே
தொட்டு முகர்ந்துமணம் துய்க்கஒரு மூக்கில்லை;
மாவின் கிளையிருந்து மட்டில்லா இன்பமுறக்
கூவுங் குயிலிருந்துங் கொள்ளச் செவியில்லை;
குன்றெனவே சோறு குவிந்திருந்தும் வாயார
நன்றெனவே உண்ணுதற்கு நல்ல பசியில்லை;
பாருலகப் பேரறிஞன் பாவலனாம் வள்ளுவன்றன்
கூரறிவுப் பேருணர்வால் கூறிவைத்த பொன்மொழியை
நானிலமே உய்வதற்கு நாவல்லான் சேர்த்துவைத்த
மாநிலமே காணாத மாநிதியைப் பெற்றிருந்தும்