பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்151

முன்னுணர்ந்து பெயர்வைத்த திருவாய் தன்னை
       முக்காலும் வாழ்த்துகின்றேன் வாழ்க என்றே.

துரையென்றால் அரசனெனப் பொருளு ரைப்பர்;
       சொற்புகழ்சேர் திராவிடநா டவற்குச் சொந்தம்;
துரையிவற்குத் தலைநகர் தான் காஞ்சி யாகும்;
       துணைநலமாம் பட்டத்து ராணி யுண்டு;
முறைவகுக்கும் நெடுஞ்செழியன் கொள்கை குன்றா
       முடியரசன் தென்னரசு போல்வா ரிங்குத்
திறைசெலுத்தும் சிற்றரசர்; எழுதுங் கோலே
       செங்கோலாம்; எழுத்தெல்லாம் படையின் கூட்டம்

வெல்லரிய படைவரிசை யுடைய வேந்தன்
       வீற்றிருக்கும் அரியணைதான் தமிழர் நெஞ்சம்;
நல்லறிஞன் இவனாட்சி பெருகக் கண்ட
       நாவிரண்டு கொண்டவர்கள் அழுக்கா றுற்றுப்
புல்லியசொற் கணைதொடுத்தும் அஞ்சா நெஞ்சன்
       புன்முறுவல் செய்துபகை வென்று நின்றான்;
சொல்லரசன் இவன்பெயரை வாழ்த்தி நிற்போம்
       தூயபுகழ் மாலைபல சூட்டி நிற்போம்.

நாட்டுக்குப் பெருமைதரும் வீரன் ஆனான்
       நாகரிக அரசியலின் தலைவ னானான்
பாட்டுக்குப் பொருளானான் பகைசேர் நெஞ்சும்
       பாராட்டும் பண்புடைய நல்லோன் ஆனான்
கேட்டுக்கு வித்தாகும் மடமை என்னும்
       கிளர்பகைக்குப் போராடும் எதிரி யானான்
ஏட்டுக்குள் ளடங்காத புகழின் மிக்கான்
       எம்மவர்க்கோர் உறவானான் அரணும் ஆனான்.

எழுத்தினிக்கும், பேச்சினிக்கும், எண்ண மெல்லாம்
       இனித்திருக்கும், முத்தமிழும் வல்லான் றன்பால்
பழுத்திருக்கும் நடிப்பினிக்கும், கழகம் காக்கும்
       பண்பினிக்கும், அரசியலின் திறமி னிக்கும்,
பழித்திருக்கும் கயவரையும் பொறுத்தி ருக்கும்
       பாங்குயர்ந்த சிறப்பினிக்கும், மேலோன் றன்னை
வழுத்துகிறேன் வாழ்த்துகிறேன் தமிழும் நாடும்
       வாழ்வதற்கே பல்லாண்டு கூறு கின்றேன்.