பக்கம் எண் :

150கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

19
பல்லாண்டு பல்லாண்டு

பொருளுயர்ந்த அரசியலில் முதலி, பேச்சில்
       பொடிவைத்து நகைசெய்யுங் கலைஞன், நெஞ்சில்
அருளுயர்ந்த பண்பாட்டில் ஐயன், ஆடை
       அணி ஆடம் பரந்தன்னில் செட்டி, பேசும்
விரிவுரையால் உளங்கவரும் கள்ளன், என்றும்
       வெல்கின்ற அறப்போரில் மறவன், கேடு
தருகின்ற பழிமொழியை நாடான், எங்கள்
       தமிழ்த்தாயின் புகழ்காக்கும் வீரப் பிள்ளை.

ஒருநாளும் பெரியார் சொல் தட்டான், என்றும்
       உயர்தமிழில் நீங்காத பத்தன், நன்மை
உருவாகும் செயலொன்றே பார்ப்பான், பேச்சில்
       உவமைசொலும் நாவிதனாய் நிற்பான், ஆட்சி
புரிமாந்தர் அடக்குமுறைக் குடையான், நல்ல
       புதுமைக்கும் பழமைக்கும் இடையன், அந்தத்
திருவாளன் நம்மவர்க்கு *நாய்க்கன், அன்பைச்
       செழிப்பிக்கும் வேளாளன் எங்கள் அண்ணா.

நன்மகனாம் பிள்ளையிவன் வாழ்நா ளெல்லாம்
       நாட்டுக்கே பணிசெய்ய ஈன்ற தாயின்
பொன்வயிற்றை மணிவயிற்றை வாழ்த்து கின்றேன்;
       பூதலத்து மாந்தரெலாம் அண்ணா அண்ணா
என்னுமொரு உறவுமுறை சொல்லும் வண்ணம்
       இந்நாட்டுத் துரையிவனே என்னும் வண்ணம்


* நாய்க்கன் - தலைவன்