பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்199

கழகம் அழியுமென வீணே கலங்குகிறாய்!
வையத்தைச் சூழ்கடலை வாயால் குடிப்பனெனப்
பொய்வைத்த நெஞ்சன் புளுகுவதை நம்புவதோ?
விண்ணகத்துச் சூரியனை வீழ்த்துவேன் என்றொருவன்
மண்ணகத்துச் சொன்னால் மதியாரோபித்தனென?
தன்மானத் தாளமுத்து தம்பி நடராசன்
முன்னாவி ஈயமுளைத்த கழகமடா!
வேலாயுத மென்ற வீரமகன் தந்த உயிர்ப்
பாலால் வளர்ந்த பசுமைக் கழகமடா
தூத்துக்குடியான் துணிவுடைய நெஞ்சத்தான்
ஏத்தவரும் கே.வி.கே.சாமி எனுந்தம்பி
தந்த உரத்தால் தழைக்கும் கழகமடா!
எந்த விதமழியும் ஏன்கலங்கு கின்றாய்?
மகமதியத் தோழர் மசீது முகைதின்
முகமலரத் தந்தஉயிர் மூச்சுக் கழகமடா!
தப்பேதும் செய்யாத் தளிரனைய மாணவர்
துப்பாக்கிக் குண்டால் துடிதுடித்து வீழுங்கால்
சிந்துசெந் நீரால் செழித்த கழகமடா!
அந்தக் கழகத்தை ஆரழிக்க வல்லார்கள்?