பக்கம் எண் :

198கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

நேருக்கு நேராக நிற்பவனோ என்னினத்தான்;
என்செய்வேன் அண்ணா இனத்தான் பகையானால்?
தன்மொழிக்குத் தானே தடையாக நிற்கின்றான்;
நாடாண்ட நம்மினமும் நற்றமிழும் தாயகமும்
பீடாண்டு கொள்ளப் பெரும்பாடு பட்டிங்கு
வாழுங் கழகத்தை வாட்டி ஒழிப்பதற்குத்
தாளம் இடுபவரைத் தந்நலமே கொண்டவரை
நம்பி ஒருமனிதன் நாடகங்கள் ஆடுகிறான்;
வெம்பித் தளர்ந்துமிகும் வேதனையால் நொந்தேன்;
உடனிருந்தே கொல்லும் உறுபிணிபோ லாகிக்
கடலிலங்கை வீடணனாய்க் கைவரிசை காட்டி,
அரியணையின் மீதேறும் ஆசை மனத்துள்
மருவும் குடிலனென மாறிமனம் போய்விட்டான்;
என்றுநான் சொன்னேன் இடைமறித்துத் ‘தம்பீ நீ
இன்றுரைத்த உன்மொழியை என்செவிகள் ஏலா
எதுவரினும தாங்கும் இதயத்தைப் பெற்றால்
கதுவவரும் துன்பம் கடிதின் விலகு’மென்றான்;
என்பால் வருகின்ற எத்துயருந் தாங்கிடுவேன்
அன்பால் உயரண்ணா அன்னைத் தமிழ்மொழிக்குத்
தீங்கு வருமென்றால் தேறுவ தெப்படியோ?
ஏங்குகிறேன் அண்ணாநீ என்னவழி சொல்கின்றாய்?
கண்ணாகக் காக்கும் கழகத்தை மாய்க்கவரின்
புண்ணாக என்மனந்தான் போகாதோ? நீ புகல்வாய்;
என்று மனம்நொந் திருவிழிகள் நீர்சொரிய
நின்றேன்; அறிஞர் நிறைமொழி வாய்மலர்ந்தார்;
‘செந்தமிழ்க்கா தீங்கு? சிறிதேனும் வாராது;
முந்தை வரலாற்றை முன்னிறுத்திச் சிந்தனைசெய்!
எத்தனைக் கற்கள் தடைபோல் இருந்தாலும்
அத்தனையும் மோதி அகற்றும் மொழியாம்
தனக்கு வரும்பகையைத் தானே தகர்க்கும்
தனித்திறமை கொண்டிலங்கும் தாய்மொழிக்காதீங்கு?
பழகுதமிழ்ப் பண்பாட்டைப் பாரில்நிலை நாட்டும்