மோதித் தகர்த்தாயா? மோத நினைந்தாயா? ஓதித் திரிவதில்தான் உள்ளம் மகிழ்கின்றாய்! சாதித்துக் காட்டிடச் சற்றும் நினைந்ததுண்டா? மூத்த தமிழ்மொழியை மொய்க்கும் பகைநீக்கிக் காத்துப் புரக்கக் கருத்தில் நினைந்தாயா? உன்னை நினைந்தே உளம்நொந்தாய்! உன்னிளமை தன்னை நினைந்தும் தணியாத் துயரடைந்தாய்! இந்த நிலைகண்டே ஏங்கி வருந்திமனம் நொந்து சிரிக்கின்றேன்’ என்று நுவன்றான்; மறப்போம்பின் மன்னிப்போம் என்றஒரு மாற்றம் தரத்தகுந்த அண்ணா தவறுளதேல் மன்னிப்பாய்! பொன்னை மறப்பேன் பொருளை மறந்திருப்பேன் என்னை மறப்பேன் இனிய மனைமறப்பேன் அன்னைத் தமிழ்மொழியை அண்ணா மறந்தறியேன்; என்னை யுருவாக்கும் என்னுயிரை, என்னுணர்வை, நான்வணங்குந் தெய்வத்தை, நாடி நரம்பெல்லாம் தான்புகுந்த செங்குருதி தன்னை மறப்பேனோ? தென்னாட்டு மண்ணில்தான் சேயாக நான்பிறந்தேன் அந்நாட்டு மண்ணள்ளி ஆசையுடன் தின்று தவழ்ந்தேன் நடந்தேன் தரையிற் புரண்டேன் தவந்தான் புரிந்தேன் தமிழ்நாட்டில் நான்பிறக்க; என்னுயிரின் மூச்செல்லாம் தென்பொதியக் காற்றாகும் பொன்னிமகள் ஊட்டியபால் என்னுடலின் செங்குருதி; அன்னைத் திருநாட்டை அண்ணா மறந்தறியேன் என்னைத் தவறாக எண்ணி இகழற்க! என்னினத்தை அவ்வினத்தின் ஏற்றத்தை எண்ணாத கன்மனத்தன் நானல்லேன் நாளுங் கருதுகின்றேன்; தார்கொண்ட தானைத் தலைவாநம் தாயகத்தைப் பார்மன்னா பாரிங்கே! பாவி சிலர்கூடிச் செந்தமிழைத் தாழ்த்துகிறார் சீர்கெட் டலைகின்றார் எந்தவிதம் அண்ணா இதனைப் பொறுத்திருப்பேன்? போருக்கு நானெழுந்தேன் போர்க்களத்தில் என்னெதிரில் |