பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்209

40
தொடர்ந்து செல்வேன்

தனக்கென்று வழியமைத்துக் கொள்ள வில்லை
       தமிழினத்தின் வாழ்வுக்கே வழிய மைத்தான்;
எனக்கென்றவ் வழியொன்றே தேர்ந்து கொண்டேன்;
       இன்றுவரை பிறழாமல் ஒழுகு கின்றேன்;
குணக்குன்றை ஒருநாளும் பழித்த தில்லை;
       குறுக்குவழி சென்றதிலை; குழப்பம் செய்யப்
பிணக்கொன்றும் விளைக்கவிலை; அதனால் துன்பம்
       பெற்றதுண்டு; வாழ்க்கைவளம் பெற்ற தில்லை.

வளமற்ற நிலைகண்டோர் பரிந்து பேசி
       வாழவழி பலவுண்டு வருக என்றார்;
உளமற்ற நிலைஎனக்கு வந்த தில்லை;
       உறுதியுளேன் ஒருபொழுதும் வழுவ மாட்டேன்;
தளர்வுற்ற எனக்கென்ன கிடைக்கு மென்று
       தரங்கெட்டுப் பிறர்வழியில் சென்ற தில்லை;
வளமற்று வாழ்ந்தாலும் அண்ணன் சொன்ன
       வழிபெற்று வாழ்கின்றேன் தொடர்ந்து செல்வேன்.

17.9.1978