பக்கம் எண் :

208கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

பேசா திருந்தவன் தான் பேதைத் தனமென்றே
ஏசா திருந்தவன்தான் என்றாலும் எல்லையின்றிப்
போதலால் என்றன் பொறுமை தனையிழந்தேன்
ஆதலால் பாட்டுக்குள் ஆவேசங் காட்டிவிட்டேன்
சூடு மிகையாகத் தோன்றுமோ என்பதனால்
சாடும் முறையதனைச் சற்றே நிறுத்துகின்றேன்;
அண்ணாவைப் போற்றுவோம் அண்ணன் வழிநிற்போம்
கண்ணேபோல் எண்ணிக் கழகத்தைக் காத்திடுவோம்
அய்யாவும் இன்றில்லை அண்ணாவும் இன்றில்லை
மெய்யாக நம்மினத்தை மேலோங்கச் செய்பவரார்?
என்றுநாம் ஏங்குகையில் ஈதோ இருக்கின்றேன்
என்று குரல்கொடுத்தார் ஈரோட்டார் பேரரிவர்;
ஈடில்லா அண்ணன் இதயத்தைப் பெற்றுள்ள
பீடுள்ளார் நம்வீட்டுப் பிள்ளை என ஆனார்;
ஈரோட்டுப் பள்ளியிலே ஏடெடுத்துக் கற்றுணர்ந்து
பாராட்டுங் காஞ்சிபுரப் பல்கலைசேர் மன்றத்தில்
கற்றுத் தெளிந்து கலைஞர் எனும்பட்டம்
பெற்றுத் திகழும் பெருமை மிகவுடையார்;
காற்றடித்த போதுங் கழகம் எனும்விளக்கை
ஏற்றி அணையாமல் எந்நாளும் காக்கின்றார்;
இன்றைக் கவர்பெருமை ஏற்றிளங் காளையர்க்கு
நன்று தெரியாது நாளை புலனாகும்.
நாட்டை வளமாக்க நம்மினத்தை முன்னேற்றப்
பாட்டை அமைக்கின்றார் பங்காளி ஆகிடுவோம்;
வீறுநடை போடுங்கள் வெற்றிமலர் சூடுங்கள்!
கூறுகிறேன் என்கை குவித்து.

.........9.1975