பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்207

வண்ணம்போல் யாரும் வடிக்க இயலாது;
வஞ்சத்தார் என்னென்ன வைதாலும் தாங்குகிற
நெஞ்சத்தான் நம்அண்ணன் நின்றநிலை மாறவில்லை;
வாடி வதங்கவில்லை வாய்த்தஒரு போர்க்களத்தில்
ஓடி ஒளியவில்லை ஊக்கங் குறையவில்லை;
மற்றவரைப் பாராட்டி வாயாரப் போற்றுவான்
மற்றோர் தனைப்புகழ்ந்தால் மங்கையர்போற் கூசுவான்;
ஆவிக்குள் ஆவியென ஆகிக் கடற்கரையில்
மேவித் துயில்கொள்ளும் மேலோனைத் தூற்றுகிறான்;
தாயைப் பழிக்கத் தயங்காத மாபாவி
வாயைத் திறந்தின்னும் வைதே திரிகின்றான்;
‘பொய்யை முதலாகப் போட்டே அரசியலைச்
செய்யுந் தலைவ’னெனச் செத்தபினும் திட்டுகிறான்;
பொய்யில் பிறந்தமனம் பொய்யில் வளர்ந்த உடல்
பொய்யால் வளர்உருவம் புத்தனையா ஏசுவது?
அண்ணாவை மிஞ்சிவிட்டார் ஆரூர்க் கலைஞரெனப்
பண்ணால் முடிபோட்டுப் பாடுகிறான் பாடட்டும்;
அண்ணா அமைத்த அருமைக் கழகத்தைக்
கண்போற் கலைஞரவர் காக்கும் கழகத்தைச்
சைத்தான் எனப்புகன்று சாக்கடையில் வந்தமொழி
வைத்தான் நமக்கெதிரில் வாய்மூடி நிற்கின்றோம்;
தன்னலத்தால் இற்றைத் தலைவருக்குப் பூமாலை
சொன்னலத்தால் சூட்டுகிறான் சூட்டட்டும் வாழட்டும்;
ஆனால் கழகத்தை அப்பேதை வாய்புளிக்க
ஏனோ பழிக்கின்றான்? ஈதென்ன விந்தை!
கலைஞர் இனிப்பாம் கழகம் கசப்பாம்
நிலைபுரிய வில்லைஎன் நெஞ்சம் பொறுக்கவில்லை;
பேதைத் தனமென்று பேசா திருப்பதா?
போதைச் செயலென்று பூனைபோல் நிற்பதா?