9 இம்மைநலம் துய்ப்போம் வாலாட்டி நாளெல்லாம் வம்புசெயும் மாந்தரைமுப் பாலூட்டி ஆளாக்கும் பாவலனை இவ்வுலகில் மாந்தர் குலமனைத்தும் மாறாத இன்பத்தில் நீந்திக் களிக்கவைத்த நேரியனைத் தீந்தமிழில் தக்க புலவரெனச் சான்றோர் நமையுரைக்கத் தக்கவழி நல்குந் தகவோனை மிக்க அறியாமை என்னும் அகத்திருளை ஓட்டச் சரியான நல்வழிகள் தந்தானை நெஞ்சில் இடுக்கண் வருங்கால் இனிதுரைத்துத் துன்பம் துடைத்து மகிழ்வூட்டுந் தூயவனைப் பாருலகோர் உள்ளத்தை எல்லாம் ஒருசேர ஈரடியால் அள்ளிக்கொண் டன்புடனே ஆள்பவனை வள்ளுவனைச் செந்தமிழ்க்குக் காவலனைச் சென்னி மிசைவைப்போம் சிந்தைக்குள் நல்ல திருமறையை வைத்திருப்போம் செம்மை யுளத்தேமாய்ச் செந்நெறியில் நின்றொழுகி இம்மைநலந் துய்த்திருப்போம் இங்கு. |