20 வள்ளுவன் அறநெறி ஆசான் வையப் பெரும்பள்ளி வாழ்கின்ற மாணாக்கர் உய்யக் குறளுரைத்த ஒப்பரிய நாவலனை ஆசான் எனவுரைப்பின் அப்பெரியோற் கீடாகக் கூசா தெடுத்துரைக்கக் கூர்மதியார் யாருள்ளார்? நல்ல குலனுடையான், நாடும் அருளுடையான், சொல்லுமுயர் தெய்வந் தொழுகின்ற கொள்கையினான், பல்கலைகள் யாவும் பயின்ற தெளிவுடையான், கல்விதனை நூற்பொருளைக் கட்டுரைக்கும் வன்மையினான்; ஓங்குங் குணமும் உலகியலை நன்கறியும் பாங்கும் மிகவுடையான் பார்புகழும் நம்ஆசான்; எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்று கொண்டொழுகுங் கல்விப் பெருமையினான், சொல்லுங்கால் தன்சொல்லைச் சூழ்ந்துரைக்கும் மற்றோர்சொல் வெல்லுஞ்சொல் இல்லாமல் விண்டுரைக்க வல்லான், மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தன் தகுதியான் வென்றுவிடத் தக்க பொறுமையினான் இல்லார்போல் முன்னிருந் தேக்கற்றுங் கற்கின்ற நல்லார் முயற்சிக்கு நல்லபயன் ஈந்திடுவான், நன்னிலத்தின் மாண்பனைத்தும் நாவலற்கும் உண்மையினால் அந்நிலத்துக் கொப்பாகும் ஆசான் இவனன்றோ? யாரும் அளந்துரைக்க லாகா அளவுடனே |